தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர் மீது வியாழக்கிழமை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலத் தெருவைச் சேர்ந்த கவிதாசன், திவாகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பிரவீன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.
இதன் பேரில், 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.