தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் தெலுங்கன்குடிக்காடு ஊராட்சியை சேர்ந்த வளத்தான் தெருவில் இருந்து தாளிவெட்டி கிராமத்துக்கு தார்ச் சாலை செல்கிறது. கல்யாண ஓடை பிரிவு வாய்க்கால் கரையில் செல்லும் இந்த சாலை வளத்தான் தெரு தொடங்கி தாளி வெட்டி வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் தூரமும் சாலை சேதமடைந்து கப்பி கற்கள் பெயர்ந்து, குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை படுமோசமாக சேதம் அடைந்து குண்டும்-குழியுமாக கிடப்பதால், இச்சாலையில் பயணிக்க முடியவில்லை என்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கும் இந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் இதனை கண்டு கொள்ளாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது