மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குற்றாலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அவ்வப்பொழுது மழை பெய்து வந்ததால், ஒரு சில நேரங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.
அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்தது. தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது குறைவாகவே காணப்படுகிறது.
மேலும் குற்றாலத்தில் சீசன் காலகட்டம் நிறைவடைந்ததாலும், வார நாட்கள் என்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், ஐந்தருவி கிளைகளில் குறைவாக கொட்டி வரும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.
ஐந்தருவி பகுதி அருகே உள்ள தோட்டக்கலைத்துறை சுற்றுலாப் பூங்காவிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாகவே அங்கு வந்து செல்வது வழக்கம். தற்பொழுது சீசன் குறைந்துள்ளதாலும், தண்ணீர் வரத்து இல்லாததாலும் தோட்டக்கலைத் துறை பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.