சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பனங்காடி கிராமத்தில் இருந்து சாத்தனி கிராமம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால், பனங்காடி கண்மாய்க்குள் சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இரண்டு பாலங்களும் பணி நிறைவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கிராம மக்களின் குற்றச்சாட்டு
இந்த கண்மாயை மீன் பிடிக்கும் குத்தகை எடுத்துள்ள நபர் தண்ணீரை தேக்கி வைத்துள்ளதால் ஒப்பந்ததாரர் பாலம் அமைக்க முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், சாலையை பயன்படுத்தி வந்த பத்து கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் சென்று வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டு, நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் விவசாயம் செய்து அறுவடை பணிகள் முடிந்த பின்னரும், மீன் வளர்ப்பதற்காக கண்மாயில் அதிகளவில் தேக்கி வைத்துள்ள மழை நீரை வெளியேற்றி, பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.