பயிர்களை, விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும். மேலும், விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலைக்கருகல், இலை உறை அழுகல் மற்றும் குலை நோய் போன்ற பூஞ்சான நோய்களை தடுக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டைசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைத்தல் வேண்டும். மேலும், இரசாயன மருந்துகள் மூலம் விதை நேர்த்தி செய்வதை விரும்பாத விவசாயிகள், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் வீதம் ”டிரைக்கோடெர்மாவிரிடி" அல்லது 1 கிலோ விதைக்கு, 10 கிராம் வீதம் ”சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்” என்ற உயிரியல் பூஞ்சான மருந்தினை விதைப்பதற்கு முன் விதையுடன் கலந்து விதைக்க வேண்டும்.
அவ்வாறாக, 1 ஏக்கர் விதைக்க தேவையான விதைக்கு, விதை நேர்த்தி செய்ய 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். அவ்வாறாக, விதை நேர்த்தி செய்வதன் பயனாக, பயிர் வளர்ச்சி காலத்தில் நோய்கள் தாக்கி, அவற்றை கட்டுப்படுத்த மருந்திற்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், நெல், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு உயிர் உர விதை நேர்த்தி செய்வதற்கு 1 ஏக்கர் விதைக்கு உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம் 50 மிலி, திரவ பாஸ்போபாக்டிரியா 50 பயன்படுத்தலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.