சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 18 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 5ம்தேதி திறக்கப்பட்டது. பத்து கட்டட தொகுதிகளில் ஆறு கட்டட தொகுதிகளில் இரண்டிரண்டு தளங்களில் 13 ஆயிரத்து 344 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவர ஒவ்வொரு கட்டட தொகுதிகளிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்த விளக்கபடம் அனிமேஷன் காட்சிகளுடன் மெகா சைஸ் டிவிக்களில் தொடர்ச்சியாக ஒளி, ஒலிபரப்பட்டு வருகிறது. மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டு ஒரு மாதம் வரை இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் ஏப்ரல் முதல் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும், வெளிநாட்டினர் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 20 மாதங்களில் பெரியவர்கள் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 626 பேரும், சிறியவர்கள் 93 ஆயிரத்து 637 பேரும், மாணவ, மாணவியர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 324 பேரும், வெளிநாட்டினர் ஆயிரத்து 249 பேரும், வெளிநாட்டு சிறுவர்கள் 110 பேரும், இலவசமாக 62 ஆயிரத்து 802 பேரும் பார்வையிட்டுள்ளனர்.