சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை
பெரிய கோட்டை கருத்தாண்டி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்லையா (வயது 62) இவரது மனைவி கருப்பாயி (வயது 45). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்சமயம் செல்லையா எந்த வேலையும் இல்லாமல் குடித்து விட்டு குடிபோதையில் அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடி போதையில் மனைவி தூங்கிக் கொண்டு இருக்கும் போது அரிவாளால் கழுத்து முகம், கண் ஆகிய பகுதியில் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். பிறகு மனைவியின் உடலை காட்டுப் பகுதியில் வீசிவிட்டு தலைமறைவானார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தகவல் அறிந்து சென்ற சாக்கோட்டை காவல் துறையினர், கருப்பாயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய செல்லையாவை காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.