
சேலம்: புதிதாக சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறையில் புதிதாக 674 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் 7 இடங்களில் அடிப்படை பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 100 தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படை சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது. இதில், சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட 100 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில், வீடு அல்லது நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று எப்படி தீயை அணைப்பது? கட்டிடத்திற்குள் சிக்கிய நபர்களை எப்படி பத்திரமாக மீட்பது? உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.