பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சேலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று(டிச.01) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலகத்தில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் மலை பாதிப்பு மற்றும் சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் கேட்டறிந்தார். மழை நீர் எங்கும் தேங்காதபடி கண்காணிக்க வேண்டும், மழை பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் சென்று உடனே நிவாரண உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர் மழையும் ஆத்தூரில் 92 மில்லி மீட்டர் மழையும் தலைவாசல் வீரகனூரில் 83 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர். இந்த மழையால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் மழைப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்குமாயின் அதனை உடனடியாக சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.