சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் ஈஸ்வரன்
(38), இவர் நேற்று வார்டு மக்களுடன் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு விசாரித்த போது நகர்புற சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் 6-வது வார்டில் தார்சாலை, சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பொது வழியில் தடத்தை ஆக்கிரமித்து தனித்தனியே சுற்றுச்சுவர் எழுப்பி கொண்டனர். இதனால் சாலை, கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.