சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு திருவிழாவானது, பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் நேற்று இரவு தொடங்கியது. முன்னதாக எல்லைப்பிடாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வின்சென்ட் பகுதியில் இருந்து பக்தர்கள் பலர் கம்பத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூச்சாட்டுதல் விழாவில் குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சங்கர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் அம்மன் மீது பூக்களை தூவி வழிபட்டனர்.