சேலம் மாவட்ட உள்ளூர் திட்டக்குழு மாதாந்திர ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது, ‘உள்ளூர் திட்ட குழுமம் 7 பேர் அடங்கிய குழு உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர், கழிவுநீர் வெளியேற்றத்திற்கான வசதிகள் ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப ஒப்புதல் அளித்தல், அனைத்து கட்டுமானங்களுக்கும் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தல், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் இணையதள முகவரி மூலமாக முழுமை திட்டத்தின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முழுமை திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தளவாய்பட்டியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்’ என்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ஷஹானா, துணை கலெக்டர் மாருதி பிரியா மற்றும் உள்ளூர் திட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.