தமிழக அரசால் சேலம் மாவட்டத்திற்கு 12 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவ ஊர்திகளை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து டி.எம். செல்வகணபதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து வாகனஙக்ளின் சாவிகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கூறும்போது, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும் சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம் பசு, எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர் பாபு, துணை கலெக்டர் (பயிற்சி) மாருதி பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.