உத்திர பிரதேசம் அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அதன் கூட்டணியினர் பாபர் மசூதியை இடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டன இதனால் ஆண்டு தோறும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று சேலம் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் இணைந்து மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இரத்தினகுமார், எஸ்ஐ கோதண்டபாணி, சிறப்பு எஸ்ஐ பாலமுருகன் தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சேலம் வழியே செல்லும் திப்ருக்கர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஹோக நியூ டெல்லி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் சோதனை நடத்தினர்.
இது குறித்து சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் கூறும் போது ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் சோதனை நடைபெறுவது வழக்கம். சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் ஆர்பிஎஃப் போலீசாரும், சேலம் ரயில்வே போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபடுவார்கள் என கூறினார்.