சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த ஓராண்டாக சிறுத்தை புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. அது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதும், யார் கண்ணிலும் சிக்காமல் பதுங்கி இருப்பதுமாக இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை புலி அதை அப்படியே போட்டு விட்டது. வனத்துறையினரும் சாதுர்யமாக சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி சிறுத்தை புலி அடித்த பசு மாட்டை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு வைத்து இருந்தனர்.
அதனை சுற்றி கண்காணிப்பு கேமரா வைத்தனர். அப்போதுதான் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது சிறுத்தை புலி என்பது தெரிய வந்தது. அதனை பிடிக்க வனத்துறை 3 கூண்டுகள் வைத்தனர். ஆனால் சிறுத்தை புலி அந்த கூண்டுகளில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி சம்பவ இடத்தை பார்வையிட்டு வனத்துறைக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தநிலையில் சிறுத்தை புலியை பிடிக்க ஈரோட்டில் இருந்து 3 பேர் கொண்ட சிறப்பு குழு நேற்று டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு வந்தது. அந்த குழுவில் இடம் பெற்றவர்கள் கூண்டு வைத்து இருக்கும் இடத்தையும், சிறுத்தை புலி நடமாட்டம் இருந்த பகுதியையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்க புதிய வியூகம் அமைத்து வருகின்றனர்.