சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவரது விவசாய தோட்டத்தில் கிணற்றின் அருகே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கு காலில் அடிபட்டு கிணற்றில் தத்தளித்த விவசாயியை, தீயணைப்பு துறையினர் புதிதாக பயன்படுத்தும் வலை உபகரணத்தை கிணற்றில் வீசினர். அந்த விவசாயி வலையில் ஏறிக்கொள்ள அவரை அங்கிருந்து மேலே பத்திரமாக மீட்டனர். பின்னர் காலில் காயம் அடைந்த அவரை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.