எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் சேவிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது45). இவர் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பூலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் மணியிடம் லிப்ட் கேட்டு உடன் சென்றுள்ளார்.
பூலாம்பட்டி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் ஆசிரியையை இறக்கிவிட்டு ஆசிரியர் மணி சாலையோரம் நின்று இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியர் மணி படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள், ஆசிரியரை மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஆசிரியர் இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியர் மணி மீது மோதிய கார் குறித்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டை பகுதியை சேர்ந்த ரவி என்பதும், இவர் ஊர்க்காவல் படை கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.