சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது தாரமங்கலம் நகராட்சி. இந்த நகராட்சி 27 வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. தி. மு. க. வை சேர்ந்த குணசேகரன் நகராட்சி தலைவராகவும், தனம் துணைத்தலைவராகவும் இருந்து வருகின்றனர். சேம் கிங்ஷ்டன் ஆணையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு துணைத்தலைவர் தனம் தலைமையில் தி. மு. க. கவுன்சிலர்கள் மைசூர், சாமுண்டீஸ்வரி ஆகியோர் வந்தனர். அவர்கள் நகராட்சி ஆணையாளரை கண்டித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனம் செலுத்துவதில்லை
அப்போது அவர்கள் கூறுகையில், ஆணையாளர் நகராட்சியில் உள்ள 4, 16, 24 ஆகிய வார்டுகளின் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ள மறுப்பதாகவும், மக்களின் அடிப்படை பிரச்சினை மீது கவனம் செலுத்துவதில்லை. அலுவலகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.