சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் உடையார்பாளையம் பகுதியில் இருந்து பயணியர் மாளிகை வரை சாலையின் நடுவில் உயர் கோபுர கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களில் இருந்து மின் ஒயர்கள் தொங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு அப்பகுதியை கடக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரிலேயே மின் ஒயர்கள் தாழ்வாக தொங்கும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கருப்பு நிறத்தில் இருக்கும் ஒயர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் ஒயர்கள் கழுத்தில் சிக்கி விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும், ஒயரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.