ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் வருகை தந்தார்.
மாவட்ட ஆரம்ப எல்லையான பார்த்திபனூரில் திமுகவினர், பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை முதல்வரை வரவேற்பதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து திமுகவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த உலகசந்திரன் மனைவி லதா, 36,. இவர் பரமக்குடியில் இருந்து பார்த்திபனூருக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது கீழபெருங்கரை என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த லதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
கார் மோதி இறந்த லதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
துணை முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் மோதி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.