சாயல்குடி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஐந்தாண்டுகளில் சிமெண்ட் பூச்சுகள், தரைத்தளம் பெயர்ந்து பரிதாபமான நிலையில் குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள அவத்தாண்டை ஊராட்சிக்குள்பட்ட குருவாடி கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ. 1. 5 கோடி மதிப்பீட்டில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட 5 ஆண்டுளில், தரமற்ற கட்டுமான பணியால் பள்ளி கட்டடத்தில் பெரும்பாலான சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், மாணவர்கள் நடந்து செல்லும் மற்றும் அமரும் தரைத்தளம் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதுகுறித்து குருவாடியை சேர்ந்த மாணவரின் பெற்றோர் அன்னக்கொடி கூறியதாவது: புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள் பள்ளி கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு தரமின்றி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப அச்சமடைந்துள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பள்ளியை முழுமையாக ஆய்வு செய்து, உயிர் சேதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.