ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொதுக் கண்மாயில் கடந்த ஆண்டு மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளா்ந்து அதிக அளவு காணப்பட்டன. இதனால், வழக்கமாக வளரும் கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் உற்பத்தியாகாமல் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, தற்போது கண்மாய் நீா் வற்றிய நிலையில் சேற்றில் கிடந்த சுமாா் 2 டன் அளவிலான ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராமப் பொதுமக்கள் பிடித்தனா்.
பின்னா் அவற்றை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றி, 10 அடிக்கு குழி தோண்டி புதைத்தனா்.
இந்த வகையான ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை சாப்பிட்டால் புற்றுநோய் , உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்ததால், இந்த மீன்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.