புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் வரை செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து அரசந்தம்பட்டி கிராமத்திற்கு செல்லும் கிராமசாலை உள்ளது.
இந்தச் சாலையை அரசந்தம்பட்டி கிராமத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்லாது பேரையூர் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையின் பெரும் பகுதி குண்டும் குழியுமாக காட்சியளித்தது. மேலும் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடந்ததால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலையைக் கடக்க பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் நாற்று நடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட சாலை ₹2. 7 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நெடுஞ்சாலை துறை மூலம் கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனிடையே தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து போக்குவரத்திற்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையை பயன்படுத்தி வந்த அப்பகுதி மக்களுக்கு புதிய சாலை பயணம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ள சாலையை புனரமைக்க நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்