புதுக்கோட்டை நகராட்சிக்கு
உட்பட்ட சோழா ரியஸ் எஸ்டேட் விரிவாக்க பகுதியில் வசித்து வருபவர் சிங்கமுத்து(74). இவர் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டுக்கு இணைப்பு வழங்குவதற்காக புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில்
கடந்த 7-9-2011 அன்று ரூ. 7 ஆயிரம் முன்வைப்பு தொகையாக கட்டணம் செலுத்தியுள்ளேன். பணம் செலுத்தி 12 ஆண்டுகளாகியும் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. எனது வீட்டில் இருந்து 150 மீட்டர் தூரத்தில்தான் பாதாள சாக்கடைக்கான சந்திப்பு குழாய் அமைந்துள்ளது. இதைகூட நகராட்சி நிர்வாகம் கள ஆய்வு மேற்கொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினேன். பாதாள சாக்கடை இணைப்புக்காக செலுத்திய முன்வைப்பு தொகையை திருப்பி வழங்க வேண்டும். சேவை குறைபாடு ஏற்படுத்தியதால் ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.