புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூரில் உள்ள பாலபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் நேற்று முன்தினம் இரவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மீது சிலர் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். துணை சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கும்பாபிஷேக மோதல் விவகாரத்தில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களில் சிலரை போலீசார் கைது செய்ததில், அவர்களை விடுவிக்கக்கோரி அந்த தரப்பினர் ஆலங்குடியில் வடகாடு முக்கத்தில் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை போலீசார் விடுவித்தனர்.