புதுச்சேரி தவளக்குப்பத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி சிறுமியின் பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு படிப்பு பாதிக்கப்படுவதாக கூறியும், 10 நாட்களில் தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள எங்களது ஆசிரியர் குற்றமற்றவர், அவர் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக கூறி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் தவளக்குப்பம் நான்கு முனைச் சந்திப்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை உதவி மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக மாணவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.