
பந்தலூர்: கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அய்யன்கொல்லி பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என ஏராளமானோர் கூடலூர், பந்தலூர், கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்குத் தினமும் சென்று வருகின்றனர். ஆனால் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகக் கிளையில் இருந்து அய்யன்கொல்லி வழியாக பல்வேறு பகுதிகளுக்குக் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர். மேலும் இயக்கப்படும் சில அரசு பஸ்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கவும், மினி பஸ்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அய்யன்கொல்லி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.