கே. எஸ். ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் சங்கம், கல்வியாளா் சங்கமம் ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா மற்றும் ஆசிரியா் விருது வழங்கும் விழா திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
கடந்த காலத்தைக் கொண்டாடுவது; வருங்காலத்தை திட்டமிடுவது என்ற கருப்பொருளோடு மகளிா் தினத்தைக் கொண்டாட 1975-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
கோலம் போடுவது, பாட்டுப் பாடுவது, ஆட்டம் ஆடுவது மட்டுமே பெண்கள் வேலை இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவா்கள் வளர வேண்டுமெனில், கல்வி, பொருளாதார சுதந்திரம் கொடுத்தாலே போதுமானது என்று கூறியவா் பெரியாா். அதனை செயல்படுத்தியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. 1929-இல் செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என பெரியாா் கூறியதை, 1989-இல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என சட்டமாக இயற்றியவா் கருணாநிதி என்று கூறி தொடர்ந்து பேசினார்.