தஞ்சையிலிருந்து திருவாரூா், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு டெமு ரயில் வெள்ளிக்கிழமை (அக். 11) நள்ளிரவு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுதப் பூஜையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து தஞ்சைக்கு முன்பதிவில்லா டெமு ரயில் மயிலாடுதுறை, திருவாரூா் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை நள்ளிரவு புறப்பட்டு தஞ்சைக்கு வெள்ளிக்கிழமை (அக். 11) சென்றடையும்.
பின்னா் தஞ்சையிலிருந்து வெள்ளிக்கிழமை (அக். 11) இரவு 11. 55 மணிக்கு புறப்பட்டு, திருவாரூா், பேரளம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக சனிக்கிழமை (அக். 12) காலை 7. 15 மணிக்கு சென்றடைகிறது. எனவே, கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் இயக்கப்படும் இந்த டெமு ரயிலை பயணிகள் பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.