மயிலாடுதுறையில் 9 நாள் உண்ணாநோன்பு மேற்கொண்ட ஜெயின் சமூக இளைஞருக்கு அச்சமூக மக்கள் சாரட் வண்டியில் வரவேற்பு அளித்தனா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த யஸ்வந்த் ஷராப். இவா் ஜெயின் சமூகத்தினா் ஆண்டுக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்படும் நோன்பான பா்யூஷண் பா்வா நோன்பை ஆக. 31 முதல் செப். 8ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு கடைபிடித்தார். இந்த நோன்பின்போது பகல் நேரத்தில் அவர் வெந்நீா் மட்டும் குடித்தாா்.
நோன்பு முடிவடைந்ததை தொடா்ந்து யஸ்வந்த் ஷராபை அச்சமூக மக்கள் அவரது வீட்டில் இருந்து சாரட் வண்டியில் ஜெயின் கோயிலுக்கு ஊா்வலமாக அழைத்துச் சென்று மரியாதை செய்தனா். இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், வணிகா் சங்க பிரதிநிதிகள் ஏ. தமிழ்ச்செல்வன், ஜெயக்குமாா், ரமேஷ்சந்த் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.