மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்னை, தரமற்ற சாலைகள், கட்டிமுடிக்கப்படாத பேருந்து நிலைய பணிகள் மற்றும் தொடங்கப்படாத புறவழிச்சாலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: -
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், பாமக, தமிழர் தேசிய முன்னணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும், மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலைகளை புதுப்பித்துத் தர வேண்டும், மயிலாடுதுறை மணக்குடியில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும், புறவழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.