மேட்டூரில் இருந்து நடப்பாண்டு தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரால் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் 1600 ஏக்கர் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட ஒன்றியங்களில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவிற்கு கடைமடை வந்து சேராததால் கருகும் பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் குளம் குட்டை வாய்க்கால் ஆறுகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை கூடுதல் செலவு செய்து டீசல் இன்ஜின் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது பருவமழையும் கை கொடுக்காமல் காவிரி நீரும் தட்டுப்பாடானதால் பல்வேறு பகுதிகளில் 30 முதல் 40 நாட்கள் வரை உள்ள சம்பா பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருக்குவளை அருகே கொடியாளத்தூர், கோவில்பத்து, வலிவலம், வடபாதி, தென்சாரி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் தண்ணீர் இன்றி 30 முதல் 40 நாட்கள் சம்பா பயிர்கள் கருகி வருவதை கண்ட விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் தண்ணீர் வழங்க கோரி கருகிய பயிரின் வயலில் இறங்கி கருகிய பயிரை கையில் ஏந்தி விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.