
திருமங்கலம்: கப்பலூர் டோல்கேட் அருகே குடிநீர் குழாய் உடைப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் கிராமத்திற்கான குடிநீர் குழாயை டோல்கேட் நிர்வாகம் உடைத்ததால் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். கப்பலூரில் டோல்கேட் நிர்வாக அலுவலக கட்டடத்தின் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக நேற்று (அக். 8) மாலை பள்ளம் தோண்டிய போது மறவன்குளம் கண்மாயிலிருந்து கப்பலூர், சாலையம்மன் நகர் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் முக்கிய குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாகி ஓடியது. இந்த தகவல் அறிந்த கப்பலூர் ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் ஊர் மக்கள் அங்கு சென்று டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினர். பள்ளம் தோண்டிய பகுதிக்கு அருகிலேயே சென்னை மணலியில் இருந்து பைப் லைன் மூலம் கப்பலுார் சிட்கோவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்படும் இரும்பு குழாயும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.