மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளதால் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெனகை மாரியம்மன் கோவில், வேப்பமர ஸ்டாப், மின்வாரியம் ஸ்டாப் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில், எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடைகள் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலில் நிற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏற்கனவே, சோழவந்தான் பகுதி பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்ததால் நிழற்குடைகள் அமைக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க போதுமான இடம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.