தேசிய நெல் திருவிழா; ஆர்வமுடன் கலந்துக்கொண்ட இயற்கை விவசாயிகள்

81பார்த்தது
தேசிய நெல் திருவிழா; ஆர்வமுடன் கலந்துக்கொண்ட இயற்கை விவசாயிகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில், நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கிரியேட் அமைப்பின் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை தாங்கி நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளதை பற்றி கூறினார்.

பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரியேட் அமைப்பின் "வெற்றிக்கு வித்திடும் இயற்கை வேளாண்மை" புத்தகத்தை வெளியிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார்.

விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஆத்தூர் கிச்சலி சம்பா, குதிரைவால் சம்பா, பூங்கார், சீரகச் சம்பா, கருங்குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, வெள்ளை கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி