மதுரை சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை சோழவந்தானில் பல இடங்களில் சாலைகளில் நடுவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பாரத ஸ்டேட் பாங்க் காமராஜர் நடுநிலைப்பள்ளி திரௌபதி அம்மன் கோவில் பகுதி, மாரியம்மன் கோவில் பகுதி மருது மகால் பகுதி, வட்ட பிள்ளையார் கோவில் பகுதி, மார்க்கெட் ரோடு பகுதி, அரசு மருத்துவமனை பகுதி ஆகிய பகுதிகளில் வணிக வளாகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்பு நடுரோட்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடங்களை அந்தந்த வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், போக்குவரத்து போலீசார் இதனை முறைப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, காமராஜர் நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள வணிக கடைகள் தங்கள் கடைகளின் முன்பு வாடிக்கையாளர்களை கூட்டமாக நிறுத்துவதன் மூலம் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.