கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர் நீலகிரி மாவட்டம் அரவங்காடு அருகே பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்றும் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார்.
அதன் பிறகு கடந்த 20 ஆம் தேதி குன்னூர் செல்வதாக தனது அக்காவிடம் சொல்லிவிட்டு முசிறியில் இருந்து குளித்தலைக்கு வந்துள்ளார். மேலும் அவருடைய தங்கை மகன் அருண்குமாரிடம் செல்போனில் பேசிவிட்டு குளித்தலை ரயில் நிலையம் செல்வதாக சொல்லி விட்டு சென்றுள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற அண்ணாமலை ஈரோட்டில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு தலையில் பின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து இறந்து போன அண்ணாமலையின் உறவினர் கலைராஜா அளித்த புகாரின் பேரில் கரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.