கருக்கம்பாளையம்: டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து
கருக்கம்பாளையம்-டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து. கணவன்- மனைவி படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தென்னிலை, கோடந்தூர் கிராமம், முதலிகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது (45). இவரது மனைவி சாமியாத்தாள் வயது (40). இவர்கள் இருவரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 5: 15- மணி அளவில், கோடந்தூரிலிருந்து வேட்டுவப்பாளையம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் கருக்குபாளையம் அருகே சென்றபோது எதிர்திசையில், கருக்கு பாளையத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் ராஜபாரதி வயது (21) என்பவர் எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்த மின்சார கார், எதிர்பாராத நேரத்தில் ராமசாமி ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கணவன் - மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞன் ராஜபாரதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.