குழித்துறை அருகே உள்ள மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இரணியல் சர்வோதய சங்க இடத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் இரவு சங்கத்தின் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மகாத்மா காந்தி சிலையின் தலைப்பகுதியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் ஜெயபால் என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் இன்று (10-ம் தேதி) போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காந்தி சிலையை உடைத்தது தொடர்பாக கழுவன் திட்டை காலனியை சேர்ந்த ராஜா சிங் (36) என்பவரை மார்த்தாண்டம் போலீசார் நேற்று கைது செய்தனர். எதற்காக காந்தி சிலை சேதப்படுத்தினர்? இந்த சம்பவத்தில் வேறு தொடர்பு உள்ளதா? என்பதை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.