குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி பூஜைக்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன் உதித்த நங்கை அம்மன், குமாரகோவிலில் இருந்து முருகன், பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவி உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாண்டு நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளிச் சென்ற சுவாமி விக்கிரகங்கள் பூஜை முடிந்து நேற்று முன்தினம் அங்கிருந்து திரும்பி வந்து நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயல் வந்து இரவு தங்கியது.
நேற்று (அக்.,16) காலை அங்கிருந்து திரும்பி உதியன் குளம்கரை, பாறசாலை வழியாக தமிழக -கேரளா எல்லை களியக்காவிளை வந்தது. சுவாமி விக்கிரகங்களை கேரளா அரசு அதிகாரிகள் முறைப்படி தமிழக அரசு அதிகாரிகளிடம் அரசு மரியாதையுடன் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அங்கிருந்து திரும்பிய சுவாமி விக்கிரகங்கள் படந்தாலுமுடு, திருத்துவபுரம் வழியாக குழித்துறை சாமுண்டேஸ்வரி கோயில் வந்து தங்கியது. அங்கிருந்து இன்று (17-ம் தேதி) காலை புறப்பட்டு பத்மனாபபுரம் சென்றடைகிறது. அங்கிருந்து முன் உதித்த நங்கை அம்மன், முருகன் விக்கிரகங்கள் சுசீந்திரம் மற்றும் குமாரகோயில் புறப்பட்டு செல்கின்றன.