குமரி கடல் அலையில் சிக்கிய 12 பேர் மீட்பு

76பார்த்தது
குமரி கடல் அலையில் சிக்கிய 12 பேர் மீட்பு
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் டி. சி. நகரை சேர்ந்தவர் ரெமிஜியூஸ் (வயது 38). இவருக்கு சொந்தமான வள்ளத்தில் இன்று (செப்.,6) 6 மீனவர்கள் கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு மீன்களுடன் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது. இதில் வள்ளத்தில் இருந்த மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதைப்பார்த்த கரையில் நின்ற மற்ற மீனவர்கள் கடலில் நீந்தி சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் கவிழ்ந்த வள்ளத்தையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.  

இதேபோல சின்ன முட்டத்தை சேர்ந்த ஜெரோன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் 6 பேர்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு  கோவளம் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது இவர்களது வள்ளமும் அலையில் சிக்கி கவிழ்ந்தது.

இதை பார்த்த மற்ற மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களையும் கவிழந்த வள்ளத்தையும் மீட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர். இதில் மீனவர்கள் 6 பேரும் காயமின்றி கரை சேர்ந்தனர். இரு வள்ளங்களிலும்  இருந்த எந்திரம், வலைகள் மற்றும் மீன்களும் கடல் அலையில்  நாசமாயின.

தொடர்புடைய செய்தி