கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் ஆகும். இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் ஒரு மகன் மகள் உள்ளனர். முருகன் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் வாத்து, ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று (செப்.,12) மாலையில் முருகன் அவரது மனைவி மஞ்சு ஆகியோர் தோவாளை பெரியகுளம் பகுதியில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டுட்டு இருந்தனர். பின்னர் அவைகளை பிடிப்பதற்காக முருகன் குளத்தின் கரை அருகே நின்று வாத்துகளை விரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் குளத்தில் விழுந்தார். அவரை காப்பாற்ற மனைவி குளத்தில் இறங்கினார். ஆனால் குளம் ஆழமாக இருந்தால் அவரும் தண்ணீரில் தத்தளித்தார்.
அப்போது அவர் வழியாக வந்த ஒருவர் முருகனின் மனைவியை பத்திரமாகமீட்டார். ஆனால் முருகன் மூழ்கியதில் மீட்க முடியவில்லை. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய முருகனை சடலமாக மீட்டனர்.
ஆரல்வாய்மொழி போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.