முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் வரை தொழில் கடன் பெற, முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை: முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்குவதற்காக, ஒரு கோடி ரூபாய் வரை, வங்கிகள் வாயிலாக கடன் வழங்க வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் வாயிலாக துவங்கப்படும் தொழிலுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமாகவும், மூன்று சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளையும், அரசு வழங்குகிறது. ராணுவப் பணியின் போது கணவரை இழந்த பெண்களும், இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், தங்களது விருப்பத்தை தொலைபேசி வாயிலாக, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 22262023 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.