காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சி. ஐ. டி. யூ தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்யக்கோருவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். , 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள், காஞ்சிபுரம் தேரடியில் இருந்து பேரணியாக சென்று, கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் (அக்.2) தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேரடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 926 பேரை கைது செய்து, மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைத்து, நேற்று முன்தினம் இரவே போலீசார் விடுவித்தனர்.
நேற்று(அக்.3), சட்ட விரோதமாக ஒன்று கூடுவது, பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, போக்குவரத்திற்கு இடையூறு செய்வது உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ், 926 பேர் மீது, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.