பேரூராட்சி ஆபீஸ் முன் நிரவப்பட்ட ஜல்லிக்கற்களால் அவஸ்தை

71பார்த்தது
பேரூராட்சி ஆபீஸ் முன் நிரவப்பட்ட ஜல்லிக்கற்களால் அவஸ்தை
செய்யூர் அருகே கடப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது.

பேரூராட்சி அலுவலகத்திற்கு அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என, தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பேரூராட்சி அலுவலகத்தின் முன் பகுதி தாழ்வாகவும், மணல் பரப்பாகவும் இருந்ததால், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கியது.

ஆகையால், பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கற்கள் கொட்டி உயர்த்தி அமைத்து, கான்கிரீட் தரை அமைக்கும் பணி, மூன்று மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.

அதற்காக ஜல்லிக்கற்கள் நிரவப்பட்ட நிலையில், தரை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பேரூராட்சி அலுவலகம் முன் ஜல்லிக்கற்கள் நிரவப்பட்டுள்ளதால், அலுவலகத்திற்கு நடந்து வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இரு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்களால் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள தரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி