குளக்கரை மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை விமரிசை

80பார்த்தது
குளக்கரை மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை விமரிசை
காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள குளக்கரை மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி மாலை 6: 00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி, குளக்கரை மாரியம்மன் மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு துாப தீபாராதனையும், பக்தர் களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

நேற்று இரவு 7: 00 மணிக்கு பாம்பன் அருட்சித்தர் ராஜாசுவாமிகள் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கி, ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

ராதாம்மாள் வரதபிள்ளை அறக்கட்டளை சார்பில், அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இன்று, காலை 7: 00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டும் நிகழ்வும், காலை 11: 00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3: 00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், மாலை 6: 00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையும், இரவு 8: 00 மணிக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், சாலை தெரு, லிங்கப்பன் தெரு, சாத்தான்குட்டை தெருவினர் இணைந்து செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி