காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு, கவரை தெருவிற்கும், பாலாஜி நகருக்கும் இடையே மழைநீர்சேகரிப்பு குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள இந்த குட்டை, மழையின்போது முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து உபரி நீர் மஞ்சள்நீர் கால்வாய் வாயிலாக வெளியேறும் வகையில் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பாலாஜி நகர், சிந்தாமணி விநாயகர் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், கால்வாய் நீர்வழித்தட பகுதியில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது.
இதனால், வட கிழக்கு பருவமழையின்போது, மழைநீர் சேகரிப்பு குட்டை முழுமையாக நிரம்பினால், குட்டையில் இருந்து வெளியேற வேண்டிய உபரிநீர் வடிகால்வாய் வாயிலாக வெளியேறாமல், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, பாலாஜிநகரில் புதர்மண்டியுள்ள வடிகால்வாயை, துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.