செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊமனாஞ்சேரியில் உள்ள காவலர்கள் உயர் பயிற்சியக மைதானத்தில் 25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியினை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இந்தத் துப்பாக்கி சுடும் போட்டி இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ஐம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்திரகாண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ரைபில்ஸ், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், ஐடிபிபி, என்எஸ்ஜி, ஆர்பிஎப், எஸ்எஸ்பி, எஸ்பிஜி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய ஆயுதப்படை பிரிவுகளிலிருந்து 704 காவல்துறையினரைக் கொண்ட
30 அணிகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டியில் மூன்று பிரிவுகளின் கீழ் 13 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ரைபிள் துப்பாக்கி பிரிவில் 5 போட்டிகளும், பிஸ்டல் / ரிவால்வர் துப்பாக்கி பிரிவில் 4 போட்டிகளும், கார்பைன் / ஸ்டென் துப்பாக்கி பிரிவில் 4 போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.