சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிதாக அமைய உள்ளது. இதற்காக, பரந்துார் மற்றும் அதைச் சுற்றிய கிராமங்களில், 5, 400 ஏக்கர் தேவை. அதில், 3, 750 ஏக்கர் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு வருகிறது. மீதி அரசுக்கு சொந்தமான நிலம்.
பரந்துார் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க மாட்டோம் என, கிராம மக்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் லோக்சபா தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சாந்த், ஏகனாபுரம் கிராமத்தினர் இடையே சமரச பேச்சு நடத்தினர்.
'ஓட்டளிப்பது அனைவரின் கடமை. அதில் இருந்து நீங்கள் விலகக் கூடாது' என, அவர் கேட்டுக் கொண்டார்.
'விவசாய நிலமாக இருப்பதால், 'விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது' என, கலெக்டர் அறிக்கை அளித்தால் போதும். நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்படும். அதை செய்ய மறுப்பது ஏன்? ' என, கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கலெக்டர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. கூட்டம் முடிந்த பிறகு, 'ஓட்டளிக்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை' என, கிராமத்தினர் தெரிவித்தனர்.