வாலாஜாபாத் - வண்டலுார் வரை, 47 கி. மீ. , நான்குவழிச் சாலையாக உள்ளது. இந்த சாலை, 2019ம் ஆண்டு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 175. 69 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன. இந்த சாலை நடுவே, மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரதான கடவுப்பாதைகளில் எச்சரிக்கை தடுப்பு சாதனங்கள் இல்லை.
நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம், அளவூர், வாரணவாசி ஆகிய கடவுப்பாதைகளில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும், சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு கடப்பதற்கும், தானியங்கி சிக்னல் அமைக்கவும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் பிரதான கடவுப்பாதைகளை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், தேவரியம்பாக்கம் - -லிங்காபுரம் செல்லும் சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிக்கு, தடுப்பு இல்லாததால், வாலாஜாபாத் - வண்டலுார் ஆறுவழிச் சாலையோரம் வாகனங்கள் திரும்பும் போது, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் மற்றும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.